Tamil Murasu (12 May 2023)
கணப்பொழுதில் மாறக்கூடிய நிச்சயமற்றது இந்த வாழ்க்கை என்ற புரிதலையும் மிகுந்த மனநிறைவையும் தருகிறது இந்த வேலை என்று கூறினார் தாதியாகப் பணிபுரியும் திரு பிரசாந்த் பிரான்சிஸ், 29. டான் டோக் செங் மருத்துவமனையில் கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றிவரும் இவர், தற்போது மூத்த தாதியாக உள்ளார்.
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த இவர், சுகாதாரத் துறையில் பணியாற்றிய தம் அம்மாவிடம், பலர் உள்ளார்ந்த அன்புடன் நன்றிகூறுவதைக் கண்டு ஊக்கம் பெற்றார்.
அந்த இளம்வயதிலிருந்தே மனித வாழ்வின் அடிப்படைக் கூறான உடல்நலத்தை, பேணும் பணியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உறுதிகொண்டார்.
மிகுந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தாதிமைப் பட்டப்படிப்பை முடித்த இவருக்கு, ஒரு மூத்த சகோதரரும் ஓர் இளைய சகோதரரும் உள்ளனர். குடும்பத்தின் வறுமைச் சூழலின் காரணமாக 2019ல் சிங்கப்பூர் வந்த இவர், அதற்கு முன்னதாக நான்காண்டுகள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தாதியாக பணியாற்றியுள்ளார்.
சிங்கப்பூர் வந்தபோது ஆரம்பகாலத்தில் இவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் தாதியாக பணியாற்றினார். இப்பிரிவில் அன்றாடம் தீவிரமான நிலையில் உள்ள நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பது மிகுந்த சவாலாக இருந்ததாகவும் ஒவ்வொரு நாளும் பல நெருக்கடியான சூழ்நிலைகளைச் சந்தித்துள்ளதாகவும் திரு பிரசாந்த் கூறினார்.
குறிப்பாக, கொவிட்-19 நோய்த்தொற்று சூழலில் நோயின் வீரியமும் தாக்கமும் சரிவர புரியாத சூழலில் அவ்வப்போது மாறும் சிகிச்சைமுறைகளை நினைவில் வைத்து நோயாளிகளைப் பராமரிப்பது மிகுந்த சவாலாக இருந்ததாக பகிர்ந்தார் திரு பிரசாந்த்.
ஒவ்வொரு நாளும் பாதுகாப்பு உடையுடன் நோயாளிகளுக்கு உதவினாலும் பொதுமக்கள் எங்களை அணுகத் தயக்கம் காட்டி ஒதுக்கும் சூழல்கள் மனவருத்தத்தை அளித்தபோதும் தொடர்ந்து இன்முகத்துடன் பராமரித்தது எங்களுக்குள் இருந்த மனித மாண்பை உணரும் தருணங்களாக அமைந்தன என்றும் கூறினார் பிரசாந்த்.
ஒரு தாதியாக எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பணிபுரியும் இவர், “ஒருமுறை இரவுநேரத்தில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான 40 வயது பெண்மணி ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டுவரப்பட்டார். பரிசோதித்துக்கொண்டிருக்கும்போதே சுயநினைவை இழந்து பேச்சுமூச்சின்றி சரிந்து விழுந்தார்.
“நெருக்கடி நிலையில் இருந்த அவருக்குத் தொடர்ந்து சிபிஆர் சிகிச்சைமுறை அளித்தேன். சற்றே தெளிந்து நிதானத்திற்கு வந்த அவர், 15 நிமிடங்களுக்குள் மீண்டும் மயங்கி விழுந்தார். இதேபோல் அன்றிரவு ஏறத்தாழ நான்கு மணி நேரம் போராடியும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்,” என்று நினைவுகூர்ந்தார் பிரசாந்த்.
அன்று மருத்துவர்களால் அவரது மரணம் உறுதிசெய்யப்பட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டு அவருடைய உடலைக் குடும்பத்தார் எடுத்துச் செல்லும்வரை குழந்தைகளுக்காகவாவது அவர் மீண்டு வந்திருக்கலாம் எனத் தாம் ஏங்கியதை மறக்க முடியாத அனுபவமாகக் குறிப்பிட்டார்.
வேலையில் திருப்தி காண்பது வழக்கம் என்றாலும் இப்பணியில் கடின உழைப்புடனும்கூட, இதுபோன்ற சம்பவங்கள் வருத்தம் அளிக்கலாம் என்று குறிப்பிட்ட திரு பிரசாந்த், ஒவ்வொரு நாளும் பல வாழ்க்கைப் படிப்பினைகளைக் கற்றுத்தரும் பணியாகவும் இது உள்ளது என்றார்.
அதிகளவில் பெண்கள் உள்ள துறையாக இருந்தாலும் பணிக்கும் பாலினத்திற்கும் தொடர்பு இல்லை என்றும் தம்மைப் பொறுத்தவரை அனைத்துத் துறைகளிலும் அனைத்து பாலினத்தாரும் பணிபுரிவது பரந்துபட்ட பார்வையை அளித்து அத்துறையின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் கூறினார்.